Friday, May 28, 2010

காலைப் பிடித்தேன் கணபதி!


காலைப் பிடித்தேன் கணபதி நின் பதம் கண்ணில் ஒற்றி
நூலைப் பல பலவாகச் சமைத்து நொடிப்பொழுதும்
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்து உன்
கோலை மனமெனும் நாட்டில் நிறுத்தல் குறியெனக்கே

மூன்று வேண்டுதல்களை இந்தப் பாட்டில் வைக்கிறார் பாரதியார். பற்பல நூற்களைச் சமைக்க வேண்டும். நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாமல் நல்ல வினைகள் செய்ய வேண்டும். கணபதியின் ஆட்சியை மனத்தில் நிலை நிறுத்த வேண்டும்.

சரணாகதியில் இரு விதம் சொல்லுவார்கள். 'எனக்குக் குழப்பம் மிகுந்து விட்டது. அதனால் எது சரி எது தவறு என்பது புரியவில்லை. உன் சீடனாகச் சரணடைகிறேன்' என்று கூறி கண்ணனை அருச்சுனன் சரணடைந்தானே அது ஒரு வகை சரணாகதி. எல்லா நெறிகளையும் சொல்லிவிட்டு விஸ்வரூப தரிசனமும் காட்டிவிட்டு தனது பெருமைகளை எல்லாம் விவரித்து விட்டு கடைசியில் 'எல்லாவற்றையும் விட்டுவிட்டு என்னையே சரணாக அடைவாய்' என்று கண்ணன் சொல்ல அதற்கு ஏற்ப அருச்சுனன் செய்யாமல் செய்கிறானே அது இன்னொரு வகை சரணாகதி.

இங்கே வேண்டுதல்களை வைக்கும் முன் 'காலைப் பிடித்தேன் கணபதி' என்கிறார் பாரதியார். இங்கே காலைப் பிடிக்கிறாரே அது மேலே சொன்ன இரு வகை சரணாகதியில் எந்த சரணாகதி என்று தோன்றுகிறது?

தன்னலம் மிக்கதோரு தருணத்தில் இறைவன் காலைப் பிடிப்பது முதல் வகை. அப்படியா இங்கே பாரதியார் செய்கிறார்? மேலோட்டமாகப் பார்த்தால் அவர் ஒரு புலவர்; அதனால் பல நூல்களைச் சமைக்க வேண்டும் என்று தன்னலத்துடன் வேண்டுவதாகத் தோன்றுகிறது. அப்படி பல நூல்களைச் சமைக்கும் போது அவற்றில் எந்த வேலைத் தவறும் நிகழாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் வைக்கிறார்; அதுவும் தன்னல வேண்டுதலாகத் தோன்றுகிறது. ஆனால் கடைசி வரியைப் பார்த்தால் அவர் தன்னல வேண்டுதல் வைப்பதாகத் தோன்றவில்லை. உன் ஆட்சி என் மனத்தில் நிலைக்க வேண்டும் என்று சொல்லும் போதே 'மன் மனா பவ; மத் யாஜி - என்னையே மனத்தில் வை. என்னை வணங்கு' என்றெல்லாம் கீதையில் கண்ணன் சொன்னானே அவை பிரதிபலிப்பது போல் தோன்றுகிறது.

இறைவனின் ஆட்சி மனத்தில் நிலைபெற்றால் 'செய்யும் தொழில் உன் தொழிலே; சீர் பெற்றிட நீ அருள் செய்வாய்' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறாரே அது போல் இறைவனின் கருவியாக இவ்வுலகத்தில் செயலாற்றிட முடியும். அப்படிச் செயலாற்றும் போது செய்யும் செயல்களில் தவறு நடக்காது. செயல்களும் பல மடங்கு நடக்கும். 'யோக: கர்மஸு கௌசலம் - யோகம் என்பது செய்யும் செயல்களில் முழுமை' என்று கண்ணனும் கீதையில் சொல்கிறான்.

ஆக, இந்தப் பாடலில் கணபதி காலைப் பிடித்த போது இரண்டாவது வகை சரணாகதையைத் தான் பாரதியார் செய்வதாகத் தோன்றுகிறது. பின்னர் வைக்கும் வேண்டுதல்கள் அதனை உறுதி செய்கிறது. அவன் அரசாட்சியில் மனத்தில் நிலை நிறுத்த வேண்டும்; அதனால் நூல்கள் பல பலவாய் செய்யப்படும்; நொடிப்பொழுதும் வேலைத் தவறு நிகழாதிருக்கும்; நல்ல வினைகள் செய்யப்படும். இதுவே எனக்குக் குறி. இவற்றை எல்லாம் செய்யம் நாமும் கணபதியின் தாளினை கண்ணில் ஒற்றிக் செயல்கள் செய்வோம்.

No comments: