Wednesday, May 19, 2010

பல பிழை செய்து களைத்தேனா?


அவரவர் செய்யும் செயலுக்கேற்ப தான் பயனும் இருக்கும். என்னை இன்று சிலர் திட்டுகிறார்கள்; எனக்குத் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால் அது நான் எப்போதோ எங்கோ செய்த வினைப்பயனே. ஆனாலும் தவறு செய்வதை நிறுத்துகிறேனா? இல்லையே. பல பிழைகள் செய்து கொண்டே தான் இருக்கிறேன். அந்த சுழலிலிருந்து தப்ப பாரதியார் ஒரு நல்ல வழியைக் கண்டு கொண்டிருக்கிறார். இந்தப் பாடலில் அதைச் சொல்கிறார் பாருங்கள்.

நீயே சரணம் நினதருளே சரணம் சரணம்
நாயேன் பல பிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்
வாயே திறவாத மௌனத்திருந்து உன் மலரடிக்குத்
தீயே நிகர்த்து ஒளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே


முதலில் நீயே சரணம் என்றார். அவன் பாராமுகமாக இருக்கிறான். இவ்வளவு குற்றங்கள் புரிந்துவிட்டு 'ஐயா நீயே சரணம்' என்றால் நீதிபதியான அவன் எப்படி மன்னிப்பான். பார்த்தார் பாரதியார். அடுத்து நினதருளே சரணம் என்று சொல்லிவிட்டார். அவனது வேண்டுதல் வேண்டாமை இலாத குணத்தை விட அருட்குணம் தானே அடியவரைக் காக்கிறது. அதனால் நினது அருளே சரணம் என்று சொல்லிவிட்டார். நாயைப் போன்ற நான் பற்பல பிழைகளைச் செய்து கொண்டிருந்தேன். இன்றோ அவற்றை செய்து செய்து களைத்து உன்னை நாடி உன் அருளை நாடி வந்தேன். எண்ணம், செயல், சொல் இம்மூன்றிலும் வேறு எந்த வித காரியமும் இன்றி உன்னருளையே எண்ணி மற்றவற்றைப் பற்றி வாயே திறவாத மௌனத்தில் இருந்து உன் மலர் போன்ற திருவடிகளுக்குத் தீயைப் போல் ஒளி விடும் தமிழ்க்கவிதைகளைச் செய்வேன் என்கிறார். அவரோ மகாகவி. மௌனத்தில் இருந்து தமிழ்க்கவிதை செய்வார். நாம்? அவர் கவிதைகளைப் படித்து அவன் மலரடிகளைப் பணிய வேண்டியது தான். கீதையில் கண்ணன் சொன்னதும் அது தானே. பரஸ்பரம் போதயந்த: என்னைப் பற்றி ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லிப் பொழுதை நன்முறையில் போக்குங்கள்.

இந்தப் பாடலில் ஒன்றைக் கவனிக்கலாம். யாரைப் பாடுகிறார் என்று சொல்லவில்லை. விநாயகர் நான்மணிமாலையில் வரும் பாடல் என்பதால் அவர் பாடும் போது விநாயகரை எண்ணியேப் பாடலை இயற்றினார் என்று சொல்லலாம்.

இந்தப் பாடலை எம்.எஸ்ஸின் அமுதக் குரலில் கேட்க

***

நான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். முதல் பாடல் நீயே என்று நிறைவு பெற்றது. இந்த இரண்டாம் பாட்டு நீயே சரணம் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் செய்குவனே என்று நிறைய அடுத்தப் பாடல் செய்யும் என்று தொடங்கும். இந்தப் பாடல் கலிப்பா வகையைச் சேர்ந்தது.

எதுகை: நீயே, நாயேன், வாயே, தீயே

மோனை: நீயே - நினதருளே, நாயேன் - நாடி, வாயே - மௌனத்திருந்து - மலரடிக்கு, தீயே - தமிழ்க்கவி.

No comments: