Thursday, June 3, 2010

கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் வேண்டும்!


எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்தில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின் மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும்
கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தர நீ கடவாயே!


மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்குச் செல்லும் போதெல்லாம் முக்குறுணி விநாயகர் திருமுன் இந்தப் பாடல் தான் நினைவிற்கு வரும். என் நினைவு தெரிந்த நாளிலிருந்து இந்தப் பாடலைச் சொல்லித் தான் முக்குறுணி பிள்ளையாரை வணங்கி வருகிறேன். அந்தப் பிள்ளையாரின் திருவுருவப் பெருமைக்கு ஏற்ற பெரிய பெரிய பொருட்களை வேண்டும் பாடல் இது.

இந்தப் பாடலில் இருக்கும் உரிமை பாரதியாரின் தனித்தன்மை. சொல்லடி சிவசக்தி என்று இன்னொரு பாடலில் பாடுவதைப் போல் இங்கே கடவாயே என்று கணபதிக்குக் கட்டளை இடுகிறார். எனக்கு வேண்டும் வரங்களை சொல்வேன் என்று சொல்லாமல் இசைப்பேன் என்கிறார். தான் கேட்பவை எல்லாம் மிகப்பொருத்தமானவை; பொருத்தமானவற்றைக் கேட்கிறானே பாரதி என்று விநாயகர் மிகவும் மகிழ்வார் என்பதைப் போல் இருக்கிறது அது.

வேதங்களும் இதே உரிமையுடன் தானே எல்லா வரங்களையும் கேட்கிறது. அந்த வேதங்களைக் கீதங்களாக இசைக்கிறோமே. அதே போல் இந்தப் பாடலும் வேதகீதமாக இசையுடன் விளங்குகிறது போலும்.

மிகக்கடினமானது எது என்றால் மனத்தின் சலனத்தை நிறுத்துவது தானே. ஆழ்ந்து உறங்கும் போது அரச மரத்து இலையைப் போல் சலனத்துடனே அசைந்து கொண்டே இருப்பது தானே மனம். அப்படிப் பட்ட மனம் சலனம் இன்றி இருப்பதே முதல் வரமாகக் கேட்கிறார் பாரதியார்.

மனம் சலனப்படும் போதெல்லாம் அதனை நல்வழிப்படுத்துவது அறிவு. சில நேரங்களில் தத்துவங்களைத் தவறாகப் புரிந்து கொண்டு அந்த மதியில் இருள் கவிழ்ந்துவிடும். அந்த நேரங்களில் மனத்தை வழி நடத்தவேண்டிய அறிவும் வழி தவறிச் செல்லும். அதனால் தான் அந்த மதியில் இருளே தோன்றாமல் என்று தெளிவுடன் இருக்க வேண்டும் என்று கேட்கிறார் போலும்.

மனம் அசைவற்றும் மதி இருளற்றும் இருந்தால் நினைக்கும் போது நினைத்ததை நடத்தலாம். அனைத்துச் செயல்களைச் செய்தாலும் எந்த வித அலட்டலும் இல்லாமல் மௌனமாக இருக்கலாம். அந்த மௌன நிலை தமக்கு வேண்டும் என்கிறார் பாரதியார்.

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளிலார்க்கு? இவ்வுலகம் இல்லை. உலகப் பட்டறிவின் மொத்தமான முடிவு அது தானே. அந்தப் பொருள் கனக்கும் படி வேண்டும். அத்துடன் நூறு வயது ஆயுளும் வேண்டும்.

முதல் மூன்று வரங்கள் துறவிகள் கேட்பது போல் இருக்க கடைசி இரு வரங்களில் வேதங்கள் கேட்பதைப் போல் கேட்கிறார் பாரதியார்.

No comments: