Saturday, June 5, 2010

நான்கு கடமைகள்!




உலகில் வாழும் எல்லோருக்கும் நான்கு கடமைகள் இருப்பதாகப் பாரதியார் கூறுகிறார். இறைவணக்கம் நான்காவது கடமை தான் - முதல் கடமையாகக் கூறவில்லை. முதல் கடமை தன்னைக் கட்டுதல் தான்.

கடமை ஆவன: தன்னைக் கட்டுதல்
பிறர் துயர் தீர்த்தல் பிறர் நலம் வேண்டுதல்
விநாயகத் தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடைமுடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா யெஹோவா என தொழுது இன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெங்கும் காக்கும் 'ஒருவனை'ப் போற்றுதல்
இந்நான்கே இப்பூமியில் எவர்க்கும்
கடமை எனப்படும் பயன் இதில் நான்காம்
அறம் பொருள் இன்பம் வீடு எனும் முறையே
தன்னை ஆளும் சமர்த்து எனக்கு அருள்வாய்
மணக்குள விநாயகா வான்மறைத் தலைவா
தனைத் தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில்
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்
அசையா நெஞ்சம் அருள்வாய் உயிரெலாம்
இன்புற்றிருக்க வேண்டி நின் இருதாள்
பணிவதே தொழில் எனக் கொண்டு
கணபதி தேவா வாழ்வேன் களித்தே!

'யா காவார் ஆயினும் நா காக்க' என்றார் வள்ளுவர். பாரதியும் முதல் கடமையாகத் தன்னைக் கட்டுவதைச் சொல்கிறார். தன்னைக் கட்டுதல் என்றால் என்ன? ஒன்றுமே செய்யாமல் இருப்பதா? அந்நிலை உயிருடன் இருக்கும் எந்தப் பொருளுக்கும் ஆகுமா? உயிருடன் இருக்கும் வரை மனம் நினைத்துக் கொண்டே இருக்கும்; புலன்கள் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும்; உள்ளுறுப்புகளும் தங்கள் வேலைகளைச் செய்து கொண்டே இருக்கும். அதனால் உயிருடன் இருக்கும் வரை ஒன்றுமே செய்யாமல் இருப்பது என்பது இயலாத ஒன்று தான். அப்படியென்றால் 'தன்னைக் கட்டுதல்' என்றால் என்ன? எனக்குத் தெரியவில்லை. குருமுகமாகத் தான் அறிந்து கொள்ள வேண்டும் போல. கண்ணன் கீதையில் சொன்னது போல் அறிவுடையோரிடம் பணிவுடனும் பணிவிடையுடனும் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

இரண்டாவது கடமை? பிறர் நலம் வேண்டுதலா? இல்லை. பிறர் துயர் தீர்த்தலே இரண்டாவது கடமை. பிறர் துயர் கண்டு இரங்கி அவருக்கு உதவி செய்து அவர் துயர் தீர்க்கும் 'செயலை'ச் செய்யச் சொல்கிறார். 'சொல்லுதல் யார்க்கும் எளிய' - எத்தனை எத்தனையோ கருத்துகளைத் தினம் தினம் பதிவுகளில் எழுதிக் கொண்டே செல்லலாம். அதனைப் படித்துப் பலரும் பெருமையாக நம்மைப் பற்றிப் பேசலாம். சும்மா பேசிக் கொண்டே இருந்தால் போதுமா? செயலில் அந்த கருத்துகள் வர வேண்டாமா? மற்றவர் துயரைப் பற்றி பேசுவதை விட அவர் துயர் தீர்க்கும் செயல்கள் செய்வதே முதன்மையானது அல்லவா? அதனால் தான் அதனை இரண்டாவது கடமையாகச் சொன்னார் போலும். ஆனால் நாம் அவர் சொன்ன இந்த இரண்டாவது கடமையை எப்போதாவது தான் செய்கிறோம். அதற்குப் பதிலாக மூன்றாவது கடமையாகச் சொன்ன 'பிறர் நலம் வேண்டுதலை'ச் செய்து விடுகிறோம்.

மூன்றாவது கடமையான 'பிறர் நலம் வேண்டுதலும்' வேண்டும் தான். ஆனால் அது பிறர் துயர் தீர்க்கும் செயல்பாட்டைக் கொஞ்சமேனும் செய்த பிறகு வர வேன்டியது. பிறர் நலம் வேண்டும் தூய மனம் உடையவர்கள் எல்லோரும் பிறம் துயர் தீர்க்கும் செயல்களைச் செய்கிறோமா என்று கேட்டுக் கொள்ள வேன்டும்.

இம்மூன்று கடமைகளுக்குப் பின்னர் தான் 'பல பெயர் பல உருவம்' கொண்டு இலகும் உலகமெல்லாம் காக்கும் 'ஒரு பொருளை' போற்றும் கடமையைச் சொல்கிறார்.

கடமையைச் செய்தால் போதும்; பயன் எண்ணாமல் செய்ய வேண்டும் என்றொரு வழக்கு இருக்கிறது. பயனை அறியாமல் கடமையைச் செய்ய இயலுமா என்னில் இயலாது என்பதே பதிலாக இருக்கும். எந்தச் செயலைச் செய்தாலும் அதனால் ஏற்படக்கூடிய பயன்களைத் தெரிந்து கொண்டே செய்ய வேண்டும். அப்படியென்றால் கீதை சொல்வது? கீதை பயனை அறிந்து கொள்ளாமலோ பயனை எண்ணாமலோ கடமையைச் செய்யச் சொல்லவில்லை. அப்படியா? அப்படியென்றால் கீதை என்ன சொல்கிறது? அறிவுடையோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

பயனை அறிந்தே கடமையைச் செய்ய வேண்டும் என்பதால் இந்தப் பாடலில் இந்நான்கு கடமைகளின் பயனைச் சொல்கிறார் பாரதியார். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பயன்கள் தான் அவை நான்குமாம்.

தன்னை ஆளுதல் முதல் கடமை என்று சொன்னவர் அடுத்துத் தலைகீழாக தன்னை ஆளும் சமர்த்தை கொடுக்க வேண்டும் என்று இறைவனையே வேண்டுகிறார். அவன் அருளால் தான் அவன் தாள் வணங்கமுடியும் என்ற ஆன்றோர் வாக்கியத்தை அறிந்தவர். அதனால் தான் தன்னைக் கட்டுதலும் அவன் அருளாலே தான் நிகழும் என்று அறிந்து அதனை வேண்டுகிறார். அந்தத் தன்னைத் தான் ஆளும் திறன் வந்துவிட்டால் போதுமே; எல்லாப் பயன்களும் தானே விளைந்துவிடுமே.

மணக்குள விநாயகா வான்மறைத் தலைவா எமக்கும் எம் நண்பர்கள் அனைவருக்கும் அந்த வான் பொருளையே நல்குவாய்!

5 comments:

நிகழ்காலத்தில்... said...

ஐம்புலன்களும் நம் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும், அதற்கு மனம் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இதுவே தன்னைக்கட்டுதல்.

கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதன் பொருள், பலன் உழைப்புக்கும், வினைத்தொடர்புக்கும் ஏற்ப கூடவோ, குறையவோ வரலாம். ஆகவே பலனை எதிர்பாராமல் உழைப்பில் கவன்ம் செலுத்து என்பதே பொருள்

ஆனால் செயல் செய்யும்முன் இன்ன பலன் வரும் என கணக்கிட்டபின் தான் செய்யவேண்டும். கணக்கிடாமல், செயல்படச் சொல்லவே இல்லை.

தன்னை ஆளுதல் என்பது கட்டுதல் என்பது மனதின் துணைகொண்டு செய்யவேண்டியது. இது சாதரண
விசயமல்ல. ஆகவே அந்த ஆற்றலை கொடு என வேண்டுகிறார்.

நல்ல பகிர்வு, வாழ்த்துகிறேன் நண்பரே

Kannabiran, Ravi Shankar (KRS) said...

romba naaL kazichi...this piLLaiyaar songs blog is back to form! Hurrah Kumaran! :)

Sweatha Sanjana said...

I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

Ganesh said...

வாழ்க வளர்க.

vadimmacchione said...

Casino & Resort, Las Vegas, Nevada - JTM Hub
The 구미 출장샵 resort is located at the intersection of South Las Vegas Boulevard 속초 출장마사지 and Flamingo Road. It is adjacent 문경 출장안마 to the 보령 출장안마 Cosmopolitan of Las Vegas. With 동두천 출장마사지