Saturday, October 11, 2008

பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்







இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் இயற்றியது, கண்ணதாசன் செட்டிநாட்டுக்காரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிள்ளையார் சுயம்புவாய் ஒரு குகையில் எழுந்தருளியுள்ள பிள்ளையார்பட்டியும் செட்டிநாட்டிலே உள்ளது ஆகவே தனது அனுபவத்தை கண்ணதாசன் இப்பாட்டில் கூறுகின்றார்.



அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
களஞ்சியத்
திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து
பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை.

பிள்ளையார் பட்டி என்னும்
பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்
திருவருள் வழங்கும் தெய்வம்
கள்ளமில் பக்தர் தந்தை
கற்பக மூர்த்தி போற்றி. - கவிஞர் கண்ணதாசன்

பிள்ளையார்பட்டி உற்சவர்


இயற்கையாக குகையில் தோன்றியுள்ள கற்பக விநாயகர் வலம் புரி விநாயகர் ( அதாவது தும்பிக்கை வலப்புறம் வளைந்துள்ளது). அவர் கற்பக விருட்சமாய் நமது துன்பங்களை துடைத்து எல்லா நலன்களையும் வழங்குவார் அவர் தாள் பணிவோம்.
************************

அன்பர்களே, KRS அவர்களுக்கு பல ஆயிரம் நன்றிகள், பிள்ளையார் சதுர்த்தியன்று முருகன், அம்பாள், சிவன், கண்ணன் பாட்டுகள் உள்ளது போல் பிள்ளையாருக்கும் பாட்டு துவங்கலாம் என்றவுடன் அதை செயல்படுத்தியதற்காக.

விருப்பம் உள்ள அன்பர்கள் அனைவரும் ( குறிப்பாக விநாயகர் அகவல் எழுதி வரும் VSK ஐயா, கணபதி ராயன் புகழைக்கூறிய கீதாம்மா ( அம்மா தங்கள் spondilytis சீக்கிரம் குணமாக அந்த பிள்ளையாரிடம் பிரார்த்திக்கின்றேன்), கவிநயா ஆகியோர்களையும் கை கூப்பி அழைக்கின்றேன். வந்து கலந்து கொள்ளுங்கள்.

Thursday, September 18, 2008

வினாயகனே! வினை தீர்ப்பவனே!

வினாயகனே! வினை தீர்ப்பவனே! இதான் முதல்வன் வலைப்பூவில் முதல் பாடல்! சீர்காழியாரின் கன கம்பீர வெங்கலக் குரலில், பாடலை இங்கு கேட்கலாம்!
வினாயகனே!வினை தீர்ப்பவனே!
வேழ முகத்தோனே! ஞால முதல்வனே!
(வினாயகனே)

குணா நிதியே! குருவே சரணம்!
குறைகள் களைய, இதுவே தருணம்!

(வினாயகனே)

உமா பதியே உலகம் என்றாய்!
ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்!
கண நாதனே மாங்கனியை உண்டாய்!
கதிர் வேலவனின் கருத்தில் நின்றாய்!

(வினாயகனே)

குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
வரி:
இசை:

ராகம்: கீரவாணி
தாளம்:

முதல்வனுக்கு முதல் வணக்கம்!

ஒவ்வொரு குழு வலைப்பூ துவங்கும் போதும் கணபதியானை முன்னிட்டு, முதல் வணக்கம் இட்டுத் தான் துவங்குவோம்! ஆனால் அவனுக்கு என்று தனியான ஒரு வலைப்பூ இது வரை தோன்றவில்லை! பிள்ளையார் சதுர்த்தி அன்று கைலாஷி ஐயா, தமது வலைச்சரப் பதிவில் இதைச் சற்று ஏக்கத்துடன் குறிப்பிட்டு இருந்தார்!

அவர் ஏக்கத்தைப் புரட்டாசியில் புரட்டிப் போட வேண்டும் என்று எம்பெருமான் திருவுள்ளம் போலும்! இதோ விநாயகப் பெருமானுக்கு என்று தனியானதொரு பாடல் வலைப்பூ! - பிள்ளையார் பாட்டு!

இன்று மகா சங்கட ஹர சதுர்த்தி!
இன்றே செய்வோம்! நன்றே செய்வோம்! யானைக் கன்றே செய்வோம்!

முதல்வனுக்கு முதல் வணக்கம்!